மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான், ஐபிஎல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் குஜராத் அணியின் ரஷீத் கான் இறுதி வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு போராடினார். இருப்பினும் குஜராத் அணி தோல்வியடைந்தது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பல்வேறு சாதனைகளை நேற்று முறியடித்துள்ளார். ரஷீத் பந்துவீச்சில் நேற்று 4/30 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டி-20 கிரிக்கெட்டில் 550 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
மேலும் 24 வயதுக்குள் டி-20 போட்டிகளில் 550 விக்கெட்களை வீழ்த்திய இவர், ஒட்டு மொத்தமாக டி-20யில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் பட்டியலில் பிராவோவிற்கு(615) அடுத்தபடியாக உள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில், பேட்டிங்கிலும் பின்வரிசை வீரராக ரஷீத் களமிறங்கி 79(32) ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் பின்வரிசை வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவரும் ரஷீத் கான் தான், இவர் 10 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் சென்னை அணிக்கு எதிராக 2021இல் 66(34) எடுத்ததே இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சாதனையாக இருந்தது. மும்பைக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் 32 பந்துகளில் 79* ரன்கள்(3 போர்கள், 10 சிக்ஸர்கள்) எடுத்ததன் மூலம் டி-20 போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆப்கானிஸ்தான் பிரீமியர்லீக் தொடரில் 56*(27) ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.