10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர் ரேஷன் பணியாளர்கள்.
தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் பொது விநியோகத் திட்டம். தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 34793 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. இவற்றை களையக் கோரி பல்வேறு கோரிக்கைகளை ரேஷன் கடை பணியாளர் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் 100 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். மேலும் நியாய விலைக் கடைகளில் எஃப்.பி.எஸ் செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட்டு, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நாளை மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.