தமிழக ரேஷன் கடைகளில் சூப்பர் மார்க்கெட் போன்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 35,323 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 10,279 பகுதி நேர கடைகள் அடங்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக அவ்வப்போது ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மற்றும் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ரேஷன் கடைகளுக்கு திடீர் விசிட் செய்து மக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகளை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டி கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நிதி நிலைமைக்கு ஏற்ப ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகளையும் இவர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி புதிதாக கட்டப்படும் அனைத்து ரேஷன் கடைகளின் முகப்பு தோற்றமும் ஒரே வடிவத்தில் ஒரே கலரில் இருக்கும் வகையில் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் வகையில் இன்னும் என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்ற பட்டியலும் தயாரித்து உள்ளனர்.
பொதுவாக ரேஷன் கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. சில கடைகளில் இதனுடன் டீத்தூள், உப்பு ஆகியவையும் விற்கப்படுகிறது. ஆனால், சிந்தாமணி போன்ற கூட்டுறவு கடைகளில் சில மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடையின் இடவசதியை பொறுத்து பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடவசதி உள்ள ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை விற்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுவது போன்று குறிப்பிட்ட ரேஷன் கடைகளை தேர்ந்தெடுத்து அங்கு மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்க உள்ளனர். பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இது விரிவுப்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 20 முதல் 25 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.