நாட்டில் ஆட்சி மாற்றம், பதவி மாற்றம் ஏற்படும் என மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விசுவாவசு வாக்கிய பஞ்சாங்கம் வாசித்த போது தெரிவிக்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை முடிந்ததும், ஸ்தானிக் பட்டர் ஹாலஸ் வாக்கிய பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார். அதில், விவசாயம் செழிக்கும். தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். நாட்டில் ஆட்சி மற்றும் பதவி மாற்றம் இருக்கும். புதிய வரிவிதிப்பால் விலைவாசி உயரும் அபாயம் உள்ளது. நாட்டில் போராட்டங்கள் ஏற்பட்டு அரசியல்வாதிகள் அணி மாறும் சூழல் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ராமேஸ்வரத்தில் உள்ள புண்ணிய ஷேத்திரமான ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் சிவமணி புதிய ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வாசித்தார். அதில், “மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும். அந்நிய நாடுகளின் முதலீடுகள் அதிகளவில் இந்தியாவுக்கு வரும். நிலக்கரி, இரும்பு, பெட்ரோலிய கிணறுகளில் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. தங்கம் வெள்ளி விலை மேலும் உச்சத்தை தொடும். மருந்து, மாத்திரைகளின் விலை உயரும்.
இந்தாண்டு பருவமழை அதிகரித்து விவசாயம் செழிக்கும். வெளிநாடுகளில் இருந்து ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் இந்தியாவில் பரவும். உலக அளவில் புதிய நோய் தாக்கும். ஆன்லைன் வர்த்தம் அதிகரிக்கும். இந்திய எல்லையில் பதற்றம் அதிகரிக்கும். அரசியல் கட்சித் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையில் பின்னடைவு இருக்கும். மக்களிடையே பண புழக்கம் குறையும். ஆங்காங்கே மத கலவரம், போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதில், சித்திரை 1 திங்கள்கிழமை பிறந்ததால் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்ற்களின் விலை அதிகரிக்கும் என்றும் ஆந்திரா, ஒடிசா மாநில கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் தனுஷ்கோடியில் புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. அதில், 2020இல் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அந்தாண்டில் மழை அதிகம் இருக்காது என்றும் மக்கள் சம்பாதிக்க வழியின்றி, இருப்பதை விற்று உண்ண வேண்டிய நிலை வரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்க முடியாமல் பலர் தங்கள் வீடு, வாசலை விற்று பிழைப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.