ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்குமே, பொருட்கள் முறையாக தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. மறுபுறம் புகார்களும், ரேஷன் அரசி கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டும் அதை, பல ஊழியர்கள் சரிவர பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ராஜம்பட்டி ஊராட்சி அத்திமரத்துவலசு கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். அப்போது பெண் ஒருவர் பொது விநியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அத்திமரத்துவலசு ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றார்.
அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் இருப்பு அவற்றின் தரம் மற்றும் விநியோக பதிவேடு ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தர். அந்த கடையில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதையும் அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே உறுதிப்படுத்தினார். தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்த பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். அத்துடன், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Read More : மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விழும் ரூ.3,000..!! இந்த திட்டங்களில் சேர்ந்துட்டீங்களா..?