நாடு முழுவதும் இருக்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அகவிலைப்படி உயர்த்துவதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60இல் இருந்து 65ஆக உயர்த்தலாம் என்ற தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில், இதுகுறித்து மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 122 அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு சேவை விதிகளின் கீழ் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”டிஜிட்டலைசேஷன், மின் அலுவலகத்தின் மேம்பட்ட பயன்பாடு, விதிகளை எளிமைப்படுத்துதல், பணியாளர் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், நிர்வாகத்தில் ஒட்டுமொத்த பணித் திறனை மேம்படுத்துவதற்கும் தேவையற்ற சட்டங்களை நீக்குவதற்கும் அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது” என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.