இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்திருந்தார். ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், சஹல் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 42.1 ஓவரில் 261 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 125 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தார்.
ஒரு நாள் தொடரில் முதல்முறையாக சதம் பதிவு செய்து ரிஷப் பண்ட் அசத்தியுள்ளார். முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் வென்றதைத் தொடர்ந்து 2-1 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ரிஷப் பண்டும், தொடர் நாயகனாக ஹார்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டனர். டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.