தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25,000 மானியம் பெற, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலாமாக்களுக்கு புதிய வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனத்தின் கொள்ளளவு 125cc மிகாமலும் வாகன விதிமுறை சட்டம் 1998ன்படி பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25,000 இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும்.
மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும், தமிழகத்தை சார்ந்தவராகவும், 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும், விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு (தேர்ச்சி அல்லது தோல்வி) இருத்தல் வேண்டும். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 32 வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பிக்க கூடாது.
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, வயது சான்றிதழ், புகைப்படம், சாதி சான்று, புகைப்படம் மாற்று திறனாளியாக உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம் அல்லது LLR, கல்வித் தகுதி சான்றிதழ் (குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), வங்கி கணக்கு எண் மற்றும் IFSC கூடிய வங்கி கண்ககு புத்தகத்தின் பக்கம் நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபுபில் பணிபுரிந்தார் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும் மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க, தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை மாவட்ட ஆட்ரியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைமினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.