கடந்த ஓராண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, பெறப்பட்ட தொகை முழுவதுமாக கொரானா தடுப்புக்காக மட்டுமே
பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதன் முழுமையான விவரங்களும் வெளிப்படைத்தன்மையோடு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இன்னமும் சொல்ல வேண்டுமேயானால் பெறப்பட்ட நன்கொடையை காட்டிலும் அதிக தொகையை தமிழக அரசு செலவழித்திருப்பது ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நீதிபதிகள், 94 காவலர்கள், 34 மருத்துவர்கள், 249 முன்களப்பணியாளர்கள், 10 செய்தியாளர்கள் என 400 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது. மே 2021 முதல் ஜூன் 2022 வரையில் கொரோனா தடுப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக மொத்தம் ரூ.685 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரானா தொற்றில் இருந்து மீள முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் பெறப்படும் நன்கொடைகள் கொரோனா தொற்றுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் செலவு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
1. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை – ரூ.553 கோடி
2. RT PCR KIT, ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள்
வாங்கிய செலவு – ரூ.285 கோடி
3. தொற்றால் உயிரிழந்த நீதிபதிகள், காவலர்கள், முன்களப்பணியாளர்களின்
குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.95 கோடி
4. தொற்றால் தன் இரண்டு பெற்றோர்களையும் இழந்த 322 குழந்தைகளுக்கு தலா ரூ.5
லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.16 கோடி
5. தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த 9,565 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என
வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.287 கோடி
6. கொரானா தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த 9 இலங்கை தமிழ் குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி – ரூ.27 லட்சம்
கொரோனா தொற்று தமிழ்நாட்டை மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தையே திக்கு முக்காடச் செய்தது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதோடு, இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயமும் தமிழக அரசுக்கு உருவானது. வரலாறு காணாத சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என ஏராளமானோர் நிதியுதவியை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.