இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் திருப்பி தாக்குதல் நடத்தியது. போர் தொடங்கி விட்டதாக கூறிய இஸ்ரேல், காஸா மீது வான்வெளி தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதுவரை காஸாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீனத்தின் தொழிலாளர்கள் வெளியேறியுள்ளனர். அதன் காரணமாக அங்கு கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இத்தகைய சூழலில்தான் இஸ்ரேலில் கட்டுமானப்பணிக்கு இந்தியாவில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரேல் சென்று பணியாற்றலாம். கட்டுமானப் பணிக்கான கொத்தனார், தச்சுத் தொழிலாளி, டைல்ஸ் ஒட்டுபவர், கம்பி கட்டுபவர் உள்ளிட்டவர்கள் அதிகமாக தேவைப்படுகிறது. முதற் கட்டமாக 10,000 பேரை தேர்வு செய்து இஸ்ரேல் அழைத்துச்செல்லும் வகையில் 15 பேர் கொண்ட இஸ்ரேல் குழு இந்தியா வந்துள்ளது.
இவர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் இஸ்ரேலுக்கு அழைத்து செல்லவுள்ளனர். இதற்கான முதற்கட்ட ஆட்சேர்ப்பு முகாம் என்பது ஹரியானாவில் தொடங்கி உள்ளது. இன்று தொடங்கிய இந்த ஆட்சேர்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி மருத்துவக் காப்பீடு, உணவு, தங்குமிடம், மாதம் ரூ.16,515 போனஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.