சசிகலா மூலம் அமைச்சர் பதவி பெற்றவர்கள், தற்போது நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு சென்றதாக திவாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் நிகழ்ச்சியில் திவாகரன் பேசுகையில், ”அவசர தேவை கருதி சசிகலாவுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கிறேன். ஜெயலலிதாவை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் எல்லாமே சசிகலாவுடன் அன்போடும், ஆதரவோடும் இருக்கின்றனர். தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் சாதாரண கட்சி தொண்டரை கூட அமைச்சர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்தான் சசிகலா. என் மீதும், சசிகலா மீதும் எவ்வளவோ வழக்குகள் போட்டனர். அவற்றை சந்தித்து கொண்டிருக்கிறோம்.
சசிகலா மூலம் அமைச்சர் பதவி பெற்றவர்கள், தற்போது அதிகாரத்துடன் வலம் வருகின்றனர். நம்பிக்கை துரோகம் செய்து சென்றுவிட்டனர். தனது உடல்நிலை தேறி வரும்போது சசிகலாவை ஒரு தொகுதியில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்து அமைச்சர் சபையில் இடம் பெற வைக்க வேண்டுமென ஜெயலலிதா கூறினார். அதற்கு சசிகலா மறுத்து விட்டதுடன், முதலில் உங்களது உடல்நிலை சரியாகட்டும், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அண்ணா திராவிடர் கழகத்தின் 2,000 முக்கிய பொறுப்பாளர்களின் கைகளை சசிகலாவிடம் ஒப்படைக்கிறேன்.
சசிகலாவுடன் நானும் சேர்ந்து பயணிப்பேன். எந்த வகையிலும் முடங்கி போய்விட மாட்டேன். அதிமுக ஜா, ஜெ என்று பிரிந்து கிடந்த போது அதை இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சசிகலா, நடராஜன். எப்போதெல்லாம் அதிமுக சறுக்கி விழுந்ததோ அப்போதெல்லாம் கை தூக்கி கரை சேர்த்தவர்கள் இவர்கள். சசிகலாவை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.