அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது சசிகலா நடத்திய மீட்டிங் ஒன்று அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கட்சி தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 17. இந்த வருடம் அதன் பொன்விழா தொடங்கும் வருடம். இதனை அதிமுகவினர் பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சார்ப்பில் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் இதனை மிகச் சிறப்பாக கொண்டாட சசிகலாவும் திட்டமிட்டுள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, தை பிறந்ததும் அதிமுக என் கைக்கு வரும் என தனது ஆதரவாளர்களிடம் அழுத்தமாக சொல்வதை தொடர்ச்சியாக செய்து வருகிறார் சசிகலா. இந்நிலையில், அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக நடத்துவது குறித்து, தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது வழக்கம் போல் நம்பிக்கை விதைகளை அவர்களிடம் விதைத்த சசிகலா, ”நீதிமன்றத்தில் எது நடந்தாலும் அதெல்லாம் நன்மைக்கே என நினையுங்கள். கட்சி நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். அன்றைக்கு எல்லோரும் என் பின்னால் வருவார்கள். என்னை எதிர்ப்பவர்கள் கூட என்னிடம் மன்னிப்புக் கேட்டு என்னை ஆதரிக்க முன்வருவார்கள். இது நடந்தே தீரும். பார்த்துக்கொண்டே இருங்கள். நீங்கள் நம்பிக்கையுடன் அரசியல் பணிகளை முன்பை விட கூடுதலாக தொடர வேண்டும். அதற்கு அக்டோபர் 17ஆம் தேதியை குறிவைத்துக் கொள்ளுங்கள். அன்றையிலிருந்து உங்கள் பணி சீரியசாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி எம்ஜிஆர் இல்லமான ராமபுரம் தோட்டத்துக்கு சென்று, அந்த வளாகத்தில் தன்னால் நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளார். அதேபோல, எம்ஜிஆர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, எம்ஜிஆர்-ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று வணங்க வேண்டும் என்றும், அப்படியே அதிமுக தலைமையகத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாஜிக்கள் சிலரும் சசிகலாவை வலியுறுத்தியிருக்கிறார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதனையேற்று அதிமுக தலைமையகம் செல்வாரா? என்கிற பரபரப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவி வருகிறது.