12-ம் தேதி பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி அன்றும் , 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி அன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் வெளியூரிலிருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னைக்கு 650 பேருந்துகளும், சேலம், மதுரை, திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து 850 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.