அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பயணித்ததற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, ”கோவை செல்வராஜ், நான் திமுக நிர்வாகிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய இணையத்தில் இருக்கின்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்-கை 99 ஆண்டுகளுக்கு எனது மகன் பெயரில் நான் லீஸ் எடுத்திருப்பதாகவும், அது திமுக ஆட்சியில் எனக்கு கிடைக்கப்பெற்றதாகவும் குற்றச்சாட்டைக் கூறி, திமுகவுக்கு துதிபாடாமல் ஒழுங்காக அதிமுகவுக்கு செயல்பட வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த அறிவுரை கூறியது அவரில்லை, அவர் அம்பு தான். அதை எய்தியவர் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸின் பன்னீர்செல்வத்தின் தூண்டுதலின்பேரில் அவர் இந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.
கொடநாடு வழக்கு தொடர்பாகப் பேசிய கே.பி.முனுசாமி, ”ஓ.பன்னீர்செல்வத்திடத்தில் கேட்கிறேன், நான்கரை ஆண்டுகாலம் அவரோடு (எடப்பாடி பழனிசாமி) துணை முதலமைச்சராகப் பயணித்தீர்கள். அப்போது இந்த சிந்தனை வரவில்லையா? இப்போது நீங்கள் தவறு செய்துவிட்டு, கழக தொண்டர்களும், பொதுமக்களும் வெறுத்து ஒதுக்குகின்ற இந்த சூழ்நிலையில், எங்களுடைய நற்பெயரையும் கெடுப்பதற்காக இதுபோன்ற கருத்துக்களைச் சொல்வதற்கு, நீண்டகாலமாக உங்களோடு அரசியல் பயணித்த என்னைப் போன்றோருக்கு வேதனையாக இருக்கிறது. தங்களோடு பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது” என காட்டமாக கூறினார்.