தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, 1 லட்சத்து, 82,375 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், கடந்தாண்டு ஜூலை வரை, 10,589 சாலை விபத்துகள் நடந்து, 11,106 பேர் உயிரிழந்தனர். நடப்பு ஆண்டில் இதுவரை, 10,066 சாலை விபத்துகள் நடந்து, 10,536 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட, 5 சதவீதம் அதாவது, 570 உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.
நடப்பாண்டு ஜூலை வரை, அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் என ஆறு வகையான விதிமீறல் தொடர்பாக, 6 லட்சத்து, 66,721 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 39 லட்சத்து, 18,197 வழக்குகள் பதிவாகி உள்ளன. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, 1 லட்சத்து, 82,375 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 39,924 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read more ; தூத்துக்குடி – மாலத்தீவு!. நாளை முதல் கப்பல் போக்குவரத்து சேவை!