Tirupati Laddu: ஜெகன்மோகன் ஆட்சியில் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதனை ஒட்டி விஜயவாடாவில் கூட்டணி கட்சியின் சார்பில் 100 நாள் நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாதங்கள் கூட தரமற்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கோயில் லட்டு பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்தையும் மாற்றி தரமானவையாக கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டேன். அதன்படி தற்போது தரமான நெய் கொள்முதல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரமான மற்றும் சுவையான லட்டு பிரசாதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏழுமலையான் கோயில் இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். உலகத்தில் உள்ள அனைவரும் இங்கு வருகிறார்கள். எனவே அந்த புனித தன்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
விசாகப்பட்டினத்தை ரயில்வே கோட்டமாக மாற்ற தேவையான நிலத்தை கையப்படுத்தி தரும்படி மத்திய அரசு ஜெகன்மோகன் அரசை கேட்டுக்கொண்டபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விசாகப்பட்டினம் ரயில்வே கோட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி உள்ளோம். விரைவில் விசாகப்பட்டினம் ரயில்வே கோட்டம் அமைக்கப்படும். சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்தபடி குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வருகிற தீபாவளி பண்டிகையின்போது தொடங்கப்படும் என்று அவர் பேசினார்.
Readmore: தூள்..! குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு ரூ.50,000… மத்திய அரசு தொடங்கிய அசத்தல் திட்டம்…!