திருவள்ளூர் மாவட்டம் திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் மைதீஸ்வரன் (9). இவர், 4ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு கால்களில் உணர்விழப்பு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மைதீஸ்வரனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு ஜிபிஎஸ் நோய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவனுக்கு இம்யூனோகுளோபளின் மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “கில்லன் பாரே சின்ட்ரோம் என்பது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு ஆகும். தரமற்ற உணவு, நீர் மாசுபாடு, மருந்து எதிர்வினை, தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
இதன் முதற்கட்ட அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருக்கும். அதனைத் தொடர்ந்து அந்த கிருமிகள், உடலின் எதிர்ப்பாற்றலுக்கு எதிராக செயல்பட்டு நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அதன் விளைவாக மூட்டு வலி, முதுகு வலி, கைகால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணர்தல், மூச்சு விடுதலில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற அறிகுறிகளுடன் ஓரிரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நோயை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடையலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேர் குணமடைந்து விடுகின்றனர். உடலில் வேறு சில பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில் ஓரிருவர் உயிரிழக்க நேரிடுகிறது. அந்த வகையில், மைதீஸ்வரனுக்கு இம்யூனோகுளோபலின் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இருப்பினும், அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. ஜிபிஎஸ் நோயின் தீவிரத்துடன் இதய பிரச்சனையும் இருந்ததால் சிறுவன் உயிரிழந்துள்ளான்” என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.