இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், கஷ்யப், சமீர் வெர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பெல்ஜியத்தின் வீராங்கனையான லியானே டானை எதிர்த்து விளையாடினார்.
உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து தரவரிசையில் மிகவும் பின் தங்கியுள்ள லியானே டானை எளிதாக எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-15 என்ற 21-11 என்ற இரண்டு செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.