பஞ்சாப் மாநிலத்தில் ஆறு வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். பஞ்சாப் மாநிலத்தின் மன்சா மாவட்டத்தைச் சார்ந்த ஜஸ்பிரீத் சிங் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் சென்று கொண்டிருந்தபோது ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் ஜஸ்பிரீத் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதில் ஒரு தோட்டா அவரது மகனின் நெஞ்சில் பாய்ந்துள்ளது. உடனடியாக குண்டடிப்பட்ட சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் ஜஸ்பிரீத் சிங். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரது உறவினர்கள் தங்களுக்கு யாருடனும் எந்த பகையும் இல்லை என தெரிவித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஒரு சிறுவனை கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம் எனவும் அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய அடையாளம் தெரியாத நபர் அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். அண்மையில் சில காலங்களாகவே பஞ்சாப் மாநிலத்தில் வன்முறையும் துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்திருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.