மகளை காதல் திருமணம் செய்ததால் மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து, வேறு வழியின்றி பதிவு திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். தற்போது ஜெயஸ்ரீ 3 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். தங்களின் எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தையும் பூசாரியுமான ஜானகிராமன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், காதல் திருமணத்தை எதிர்த்து வந்த பூசாரி தனது மருமகனான விஜி என்பவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனால், தனது கோவிலுக்கு வரும் இளைஞர்களான சிவா, திருமலை, மதி, ஆகியோரை தனது மகன் ராஜேஷ் உதவியுடன் கூலிப்படையாக தயார் செய்து கொலை செய்ய சில நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு விஜி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் விஜியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த மற்றொரு ஊழியர்களுக்கும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பித்தது.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜியை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மகளை காதல் திருமணம் செய்ததால் மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகர் சூரி..!! ’கருடன்’ திரைப்பட வசூல்..!! 15 நாட்களில் இத்தனை கோடியா..?