முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகள் நீர்ப் பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பெறுவதற்கு, முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஒன்றிய அரசின் வரையறுக்கப்பட்ட விலையில் அரசு மானியத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டுவருகிறது. சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பின்றி பகலில் சுமார் 8 மணிநேரம் வரை பாசனத்திற்காக 3 HP முதல் 15 HP வரை மின் மோட்டார் இயக்குவதற்கான தடையில்லா மின்சாரத்தினை பெற முடியும். மின் இணைப்பு இல்லாத, பாசன ஆதாரமுள்ள தனிநபர் விவசாயிகள் மற்றும் மின் இணைப்பு இல்லாத பாசன வசதிக்கான சமுதாயக் கிணறு அமைத்துள்ள விவசாய குழுக்கள் தகுதியானவர்களாகும்.
புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள், நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு 70% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 60% மானியத்திலும் அமைத்துத் தரப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 10% மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.
சூரிய சக்தி பம்புசெட்டுகளை பெற விரும்பும் விவசாயிகள் இலவச மின் இணைப்புக் கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் போது, சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.
வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள் மற்றும் கான்கிரீட், காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு சூரிய சக்தி பம்புசெட்டு அமைக்கப்பட வேண்டுமானால் நீர்வள ஆதாரத் துறையிடமிருந்து தடையில்லாத சான்று பெற வேண்டும். மேற்படி வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் போது நீர்வள ஆதாரத்துறையின் தடையில்லா சான்றினை இணைத்திட வேண்டும்.
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் நேரடியாக https://pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் அல்லது விவசாயிகள் நேரடியாக அந்தத்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளர் இளநிலைப் பொறியாளர்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அவர்களை 0427- 2906266 என்ற எண்ணிலும், உதவி செயற்பொறியாளரை 0427- 2905277 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.