இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கிப் போனது. தற்போது அந்த பெருந்தொற்றிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தற்போது பரவ ஆரம்பித்திருக்கிறது . கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஜேஎன் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஏராளமான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த புதிய வகை கொரோனா தொற்றால் நாடு முழுவதிலும் 2997 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பீகார் அரசு கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் தொடங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காய்ச்சல் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் உடனடியாக கொரோனா நோயை கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவித்திருக்கிறது. மேலும் பொது இடங்களில் முக கவசத்தை கட்டாயமாக்கி இருப்பதோடு கொரோனா நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நோய் தொற்று தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புதிய தொற்றைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றனர். இந்த ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றால் நாட்டு மக்களிடையே பெரும் வீதி நிலவி வருகிறது.