சீமான் பரப்புரையின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மோதலில் காவல் பணியில் இருந்த 3 போலீசார், 5 நாம் தமிழர் தொண்டர்கள் மற்றும் 6 திமுகவினர் காயமடைந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து பரப்புரை மேற்கொண்டார். அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலமானது அரசு மருத்துவமனை சாலை காவேரி சாலை வழியாக பொதுக்கூட்டம் நடக்கும் மேடையை நோக்கி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. வாகனத்தில் நின்றபடி சீமான், வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் பரப்புரை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வீரப்பசத்திரம் சாலையில் மாடியில் இருந்து சிலர் சீமான் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் அக்கட்சியை சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். மேலும், காவலில் இருந்த 3 போலீசார் காயமடைந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் திருப்பித் தாக்கியதில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.
பின்னர், அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேச மேடைக்கு வந்த சீமானை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொதுக்கூட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும் சீமான் 10 நிமிடம் பேசி வாக்கு சேகரித்தார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். மோதலில் காயமடைந்த இரு தரப்பினரும் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் சசி மோகன் விசாரித்து வருகிறார்.