உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகள் தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தன. அதன்படி, தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.
இதற்கெல்லாம் காரணம், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தேங்காய் விலை சரிவை சந்தித்து வருகிறது. ஒரு தேங்காய்க்கு ரூபாய் 7 முதல் 8 வரை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிரவித்திருந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு கொப்பரை தேங்காய் ரூபாய் 17 முதல் ரூ.18 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது கடும் விலை சரிவை சந்தித்துள்ளது விவசாயிகள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், தென்னை விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
எனவே கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, தேங்காய் விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மணிமாதவன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், “மாநில தலைமை மூலம் தமிழக அரசிடம் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள கொப்பரையை கொள்முதல் செய்து, எண்ணெய்யாக்கி அதனை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் தென்னை விவசாயிகள் தேங்காய்களுக்கு விலை கிடைக்காமல் இன்னும் விலை வீழ்ச்சியினை சந்திக்கும்” என்றார்.
ஆக, இப்படி நாலாபக்கமிருந்தும் நெருக்கடிகள் வருவதால், ரேஷனில் தேங்காய் எண்ணெய்யை வழங்க, விரைவில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தேங்காய் எண்ணெய்யை வழங்கினால், பாமாயில் வழங்கப்படுவது நிறுத்தப்படுமா..? என்பது தெரியவில்லை. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.