அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, விற்பனை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்பில் நடப்பு ஆண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ‘டான்செட்’ அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.சி.ஏ. படிப்புக்கு பி.சி.ஏ. பட்டதாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் அவசியம். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 45 சதவீத மதிப்பெண் போதும். மேலே குறிப்பிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், தொலைதூரக் கல்வியில் MBA, MCA, M.Sc., ( CS ) ஆகிய படிப்புகளில் சேர https://cde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைனில் MBA பயில https://onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.