நடப்பு நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடியும் எனவும் இத்திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த 7.5 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதால் இந்த திட்டம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே இதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் எனவும் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வருமான வரி சட்டத்தின் கீழ் டிடிஎஸ் வரி வசூலிக்கப்படும். இதன் பயனாளிகள் ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் பெற்றால் அதற்கு டிடிஎஸ் வரி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.