மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றதாக பேசிவருகின்றனர். முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைத்துறை பற்றி எரிகிறது.
சமீபத்தில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இந்நிலையில், தமிழ் திரைத்துறையில் பலரும் அறிந்த நடிகரான ரியாஸ் கான் மீது கேரளாவை சேர்ந்த நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,, ஒரு புகைப்பட கலைஞரிடம் இருந்து தனது தொலைபேசி எண்ணைப் பெற்ற ரியாஸ் கான், இரவு நேரத்தில் செல்போன் மூலம் அழைத்து தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததுடன், அருவறுக்கத்தக்க வகையில் ரியாஸ் கான் பேசியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, ‘என் ஆசைக்கு இணங்கக்கூடிய உன் தோழிகள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை’ எனக் கூறியதாக ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார். ரியாஸ் கான் போன்ற நபர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவரின் குற்றச்சாட்டால் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து, நடிகர் ரியாஸ் கான் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
Read more ; நீதிபதி தேர்வில் வினாத்தாள் கசிவு.. சிக்கிய பெரிய தலை..!! 5 ஆண்டு சிறை தண்டனை..!!