ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களைக் கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர பொருட்களுக்கு இணையாக வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை சமிபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதே போல வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் காதி பொருட்கள், அரசு உப்பு, பனைவெல்லம் உள்ளிட்டவற்றை அதிகம் விற்பனை செய்தால் விற்பனை தொகையில் 1% ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காதி பொருட்கள் மட்டுமின்றி அரசு பனைவெல்லம் விற்பனை செய்யும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை பொருந்தும் என அறிவிக்கபட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் நிர்ணயித்த தொகைக்கு விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Polytechnic மாணவ, மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை...! உடனே விண்ணப்பிக்கவும்….! ஆட்சியர் அறிவிப்பு