அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தை பொருளாதார இழப்பில் இருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்திருக்கும் தமிழக அரசு, பின்னர் படிப்படியாக அனைத்து பேருந்துகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் மனநிலையில் இருக்கிறது.
போக்குவரத்துக் கழகத்தை தனியார் வசம் ஒப்படைப்பது இத்துறையை முற்றிலும் அழிப்பதற்கு சமம் என்று திமுக தவிர்த்த அனைத்துச் தொழிற்சங்கங்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. மகளிருக்கும், காவலர்களுக்கும், மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசம் என்று அறிவித்த தமிழக அரசு, தனியாருக்கு தாரைவார்த்த பிறகு இவர்களுக்கான இலவசப் பயண திட்டத்தை என்ன செய்யப்போகிறது? ஒருவேளை இந்த இலவசங்கள் தனியார் பேருந்திலும் தொடருமானால் அதற்கான இழப்பீட்டை, தமிழக அரசு தனியாருக்குத் தருமா? அப்படித் தந்தால் அது தகுமா? தமிழக அரசு தாங்குமா? என்ற கேள்விக்கு விடை என்ன?
தொலைநோக்குப்பார்வை இல்லாமல் தடாலடி முடிவுகளை எடுத்துவிட்டுத் தடுமாறும் வழக்கத்தை இன்னும் தமிழக அரசு கைவிடவில்லை. அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றும் அத்தியாவசிய நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதை தமிழக பாஜக சார்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.