தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை காரணமாக தேங்கி நிற்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெளியான அறிவிப்பு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் வட மற்றும் தென் மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கனமழையால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், ஏற்பட்ட வெள்ளத்தால் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலை உள்ளது. இதற்கிடையே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30ஆம் தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.