கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன், மற்றொரு யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு வீடியோ வெளியிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காரமடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மதன் ரவிச்சந்திரன் தனது யூடியூப் பக்கத்தில் அய்யப்பன் ராமசாமி பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டார். அதில், அய்யப்பன் ராமசாமி குறிப்பிட்ட கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு அந்தக் கட்சிக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்திப் பேச ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று மதன் கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டினால் அய்யப்பன் ராமசாமியின் ஆதரவாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதன் வெளியிட்ட வீடியோவில் அய்யப்பன் ராமசாமி தனது பெண் ரசிகர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசி இருப்பதால் அவர்களும் ஆத்திரத்தில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து அய்யப்பன் ராமசாமி பதிவிட்டிருந்தார். இதற்கிடையே, மற்றொரு யூடியூபரான டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் புதிய வீடியோ வெளியிட்டு அய்யப்பன் ராமசாமி பெண்களை இழிவுபடுத்திப் பேசிவிட்டதாக கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். அதில் அய்யப்பன் ராமசாமியை நேரடியாக மிரட்டி இருக்கிறார். “அய்யப்பன் ராமசாமி ப்ரோ… அதே சட்டைய போட்டு உங்க மேல வெறியோட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. கையில மட்டும் சிக்கினீன்னா மூஞ்சி மொகரை எல்லாம் ஒடைப்பேன்.. உண்மையாவேங்க… கையில மாட்டினான்னா மூஞ்சி மொகரை எல்லாம் ஒடைப்பேன்” என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து காரமடை காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், டிடிஎஃப் வாசன் அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டு காவல்துறையிடம் சிக்குவது குறிப்பிடத்தக்கது.