fbpx

ஆசிரியர் தினம் 2024!. அறியாமை இருளை நீக்கி அறிவு தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!

Teachers Day 2024:“மங்கையராக பிறப்பதற்குமாதவம் செய்திடல் வேண்டுமம்மா!”என்றார் கவிமணி.“ஆசிரியராக இருப்பதற்குஅருந்தவம் செய்திடல் வேண்டும்!” என்றே எண்ணுகிறேன்.

தலைப்பாகையும், கைப்பிரம்பும் ஓர் ஆசிரியரின் அடையாளமாய் காணப்பட்டது ஒரு காலம். இன்றோ கணிப்பொறியும், நவீன உத்திகளும் ஆசிரியரின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன. அன்று புளியங்கொட்டையை கொண்டு ‘அ’ போட பழகியது குழந்தை. இன்றோ கணிப்பொறியின் முன் அமர்ந்து அலங்கார ஓசையுடன் ‘A’ போட பழகுகிறது குழந்தை. இது காலத்தின் மாற்றம்.
ஆசிரியரைக் கண்டவுடன் இரு கைகளையும் குவித்து வணக்கம் செய்திட்ட காலம் தற்போது மாறி ஆசிரியரும் மாணவரும் சரிநிகர் சமமாக அமரும் காலகட்டத்தில் இருந்து வருகிறோம். “ஆசிரியர் சொல்வதே தாரக மந்திரம்!” என்ற காலம் மருவி பரிணாமவளர்ச்சி அடைந்து இன்று ஆசிரியரும் மாணவர்களும் கலந்துரையாடும் உயிரோட்டமுள்ள வகுப்பறையாக மாறியுள்ளது.

ஆரம்ப காலங்களில் குருகுல கல்விமுறை இருந்தது. இதில் மாணவர்கள், குருவின் இல்லத்திற்கே சென்று பயின்றனர். குரு என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர்களாக கருதப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று பயின்று வரக்கூடிய பள்ளி என்ற ஓர் அமைப்பு தோன்றியது. சுண்ணாம்பு கட்டியும், கரும்பலகையும் பிரதானமாக கருதப்பட்டது. வாய்மொழியாக ஆசிரியர் கற்பிப்பதும், அதை செவிவழியாய் மாணவர்கள் கேட்பதுமாய் இருந்தது.

இந்த நிலையும் மாறி, வண்ணப்படங்கள், கையால் செய்த மாதிரிகள் கொண்டு கற்பித்து பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றமும் காலப்போக்கில் மாறியது. மாற்றத்தின் விளைவாய் கணிப்பொறிவழி கல்வி ஏற்பட தொடங்கியது. வகுப்பறையிலேயே குறுந்தகடுகள் மூலம் கற்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய இணையத்தின் வளர்ச்சிக்கு இணையாக எதுவும் இல்லை. நூலகத்தில் மணிக்கணக்கில், நாட்கணக்கில் தேடித்தேடி சில விஷயங்களை பிடிப்போம். ஆனால் கணினியில் வலைவீசி தேடுபவர்க்கு வலைத்தளங்களில் எதுவும் சிக்காமல் இருப்பதில்லை.

சமூக வலைதளங்கள் வேறு பல்வேறு நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அவை நேரத்தை கலாசாரத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்பதையும், மனித உறவுகளையே குறைத்துவிடுகின்றன என்பதனையும் எண்ணிப்பார்க்க இயலாமல் இல்லை. ஒரு புறம் வளர்ச்சி, மறுபுறம் கலாசார சீரழிவு. இதில் எதை ஏற்பது. எதை தவிர்ப்பது என்பதில், காய்ச்சிய இரும்பையும் கையில் பிடிக்கும் துணிச்சலுள்ள இளைஞர் சமுதாயத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

இங்குதான் தலைகாட்டுகிறார் ஆசிரியர். காய்ச்சிய இரும்பை எப்படியும் வளைக்கலாம், அதை லாவகமாக பக்குவமாக மெருகேற்றி வளைக்கலாம் என்பதை கற்பிக்க முற்படுகிறார் ஆசிரியர். ஆசிரியர் என்பவர் உன்னத ஸ்தானத்துக்கு உரியவர் என்பதை நிரூபிக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்களின் முக்கியத்துவம் சில நேரங்களில் குறைந்துவிட்டதுபோல் தோன்றலாம். சில நேரங்களில் ஆசிரியர்களுக்கு மாற்றாக தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துவிட்டதுபோல் மாயையும் உருவாக்கலாம். ஆனால் மிகவும் கூர்ந்து நோக்கும்போது ஆசிரியர் இச்சாதனங்களுக்கு உதவி செய்யும் ஒரு சாதனமாகவே காட்சி தருகிறார்.

இந்த ஆசிரியர் என்ற உன்னத மனிதரின் இடத்தை வேறு எந்த வளர்ச்சியாலும் பிடிக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு மட்டுமே தாயாக இருக்கிறார். ஆனால் பெற்றெடுக்காத பல குழந்தைகளுக்கு தாயாக, தோழியாக, வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் என்றுமே யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உன்னதமான, உயர்வான இடத்திலேயே செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. நேற்றைய ஆசிரியரும், இன்றைய ஆசிரியரும், நாளைய ஆசிரியரும், மனித குலத்தை பொறுத்தவரை அற்புதமான நெறியாளர் ஸ்தானத்திற்கு உரியவர்! அதை எந்த விஞ்ஞானமும் மாற்றிட இயலாது. வாழ்வில் அனைத்தும் நெறிப்படுத்த வல்லாரே ஆசிரியர் பெருமக்கள். இதை உணர்த்தும் வண்ணமே டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

Readmore: தமிழகமே அலர்ட்!. இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!.

English Summary

Teacher’s Day 2024!. Greetings to all the teachers who remove the darkness of ignorance and light the lamp of knowledge!

Kokila

Next Post

விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை!. தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Thu Sep 5 , 2024
Ganesha Chaturthi, continuous holiday!. Special buses are running all over Tamil Nadu from today!

You May Like