ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா, காரில் இருந்தபோதே கிரேனில் காரை கட்டி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக சர்மிளா காரில் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.சர்மிளா. இவரது சகோதரர்தான் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. சர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார். இவர் தெலங்கானாவில் 3,500 கி.மீட்டர் தொலைவுக்கு பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த பாத யாத்திரை மூலம் அவர் 75 சட்டசபை தொகுதிகளை கடந்து அவர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
அவர் பாத யாத்திரை தொடங்கி 224 நாளானது. இந்நிலையில், ஹைதராபாத் நகரில் அவர் காரில் இருந்து முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது காருக்குள் ஓட்டுநர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். அவரை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. எனினும், அவர் மறுப்பு தெரிவித்ததால், காரை கிரேனின் உதவியுடன் கட்டி சாலையில் இழுத்துச் சென்றனர். இதனால், அங்கு திரண்டிருந்த சர்மிளாவின் கட்சியினர் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிரான குரலெழுப்பினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைய சர்மிளா முயன்றார். அப்போது, அவரை தடுத்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.