முதல்வர் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த பணி நியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக் கூடிய பள்ளி நிர்வாகக் குழுவே மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
பின்னர் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், திறன் உள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தியில்லை என்றால் உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ”தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது. முதலமைச்சரின் அறிவுரைப்படி தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதுகுறித்த வழுகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதி, மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது” என்று தெரிவித்தார்.