எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 8 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ’ரூபி’ என்ற எலக்ட்ரிக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோ ரூமில் நேற்றிரவு திடீரென தீ பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியது. இதனால் ஷோ ரூம்-க்கு மேலே இருந்த லாட்ஜ், ஹோட்டல் ஆகியவற்றில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், தீயில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ”எலக்ட்ரிக் ஷோ ரூம் தரை தளத்தில் செயல்பட்டு வந்தது. சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீரென தீ பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்து மேல் மாடிகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் மொத்தம் 24 பேர் சிக்கியிருந்தனர். 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணம் அடைந்தனர்” என்றனர்.
இச்சம்பவம் குறித்து தெலுங்கானா அமைச்சர் முகமது அலி கூறுகையில், ”இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க கடுமையாகப் போராடிப் பார்த்தனர். ஆனால், கடும் புகையால் சிலர் உயிரிழந்துவிட்டனர். லாட்ஜில் இருந்த பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.