தமிழ் திரையுலகின் பிரபலமான பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார். இவருக்கு வயது 82 ஆகும். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை வசந்தா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1944-ஆம் ஆண்டு பிறந்த இவர், முதலில் நாடகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் இடம் பெற்றார். அதன்பிறகு சினிமாவுக்குள் நுழைந்த நடிகை வசந்தா சினிமாவில் கால்தடம் பதித்தார். நடிகை வசந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் ஜெய் சங்கர் நடிப்பில் வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்திற்கு அம்மாவாக் நடித்தார். மேலும் “மூன்றாம் பிறை” படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும் நடித்துள்ளார்.