கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்தனர்.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் சரமாரி கேள்விகளை எழுப்பினார்..
மேலும், சின்னசேலத்தில் நடந்தது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல.. திட்டமிட்ட வன்முறை போல் தெரிகிறது.. இந்த வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இந்த வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.. மேலும் வன்முறை சம்பவம் குறித்து சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தி வன்முறையாளர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்..
மேலும், பள்ளி மாணவி உடலை 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.. மறு உடல் கூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், மாணவியின் தந்தை, வழக்கறிஞர் கேசவனும் மறு பிரேத பரிசோதனையின் போது இருக்கலாம் என்றும் நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.. உடற்கூராய்வுக்கு பின் மாணவியின் உடலை பெற்றோர் எதிர்ப்பின்றி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மாணவியின் இறுதி சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்..
வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்புகளை அவர்களிடம் இருந்து தான் வசூலிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, எதிர்காலங்களில் கல்வி நிலையங்களில் மரணம் நிகழ்ந்தால், அதனை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 29-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்..