2022ஆம் ஆண்டுக்கு முன்பு UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தான், தற்போது அந்த கட்டணத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இப்போது, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் எந்த பரிவர்த்தனைகளுக்கும் வணிகர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், MDR கட்டணங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் UPI மூலம் பணம் செலுத்தும் தொகையைப் பெறும் வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி தாக்கல்களின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ள வணிகர்களுக்கு MDR மீண்டும் வழங்கப்படலாம். இதனால், பெரிய வணிகர்கள் அதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். சிறு வணிகங்கள் குறைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். விசா மற்றும் மாஸ்டர்கார்டு டெபிட் கார்டுகள் போன்ற பிற கட்டண முறைகளுக்கும், அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் பெரிய வணிகர்கள் ஏற்கனவே MDR செலுத்துகிறார்கள். அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை முறையான UPI-க்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், பல வணிக நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவது கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.