சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. சென்னை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா பீச் இருக்கின்றனது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இது இருக்கின்றது. வார விடுமுறை நாட்கள், புத்தாண்டு தினத்தில் சென்னை கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் இங்கு வந்து செல்வதற்கு இணங்க மாநகராட்சியும் கடற்கரை பகுதியை சுத்தமாக பராமரித்து வருகிறது.
மெரினா கடற்கரையை மேம்படுத்தவும் பல்வேறு புது நடவடிக்கைகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் படி திறந்தவெளி திரையரங்கம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், “உலகின் நீளமான கடற்கரைகளில் சென்னை மெரினாவும் ஒன்று. மெரினாவை சர்வதேச தரத்தில் உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
மெரினா தொடர்பான நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். இந்த தீர்ப்பிற்கு பிறகு சர்வதேச அளவில் கலந்தாலோசகரை நியமனம் செய்து சுற்றுச்சூழல் விதிகளின் படி தற்காலிக கட்டமைப்புடன் “திறந்தவெளி திரையரங்குகள்” அமைக்கப்படும். இதேபோன்று குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களுடன் கூடிய வசதி, மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை ரசிப்பது போன்ற அமைப்பு, முதியவர்கள் கடல் அலையை ரசிக்க பிரத்யேக வசதி, இசை, நீருற்று போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது” என்றார்.
சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தலமாக இருக்கும் மெரினா கடற்கரையில், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடங்கள், திறந்த வெளி திரையரங்கங்கள் போன்றவை அமைய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக உள்ளது.
Read more ; Breaking: அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு ரத்து…! அமைச்சர் அதிரடி