பள்ளி உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு நீதிமன்ற பல்வேறு வழக்குகளில் மனுதாரர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பணைகளில் அரசுப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தருமாறும், பள்ளிகளுக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்குமாறும் ஆணைகள் பெறப்படுகின்றன . இது போன்ற நேர்வுகளில், மாவட்ட கல்வி அலுவலர்களால் அப்பணிகளுக்கு அனுமதி வழங்க தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்துவதாக அறிய வருகிறது. இத்தகைய நேர்வுகளில் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மனுதாரர்களிடமிருந்து கோரிக்கை பெறும் அன்றே தொடர்புடைய பள்ளிகளில் உரிய பணியினை மேற்கொள்ள அனுமதி ஆணை வழங்கிட வேண்டும்.
உட்கட்டமைப்பு பணிகளைப் பொருத்தவரையில் பொதுப் பணித்துறையின் கட்டுமான விதிமுறைகள் மற்றும் தர நிர்ணயங்கள் (Norms and Standards) பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும். திறன் வகுப்பறைகள் (Smart Class) திறன்மிகு பலகைகள் (Smart Board) உள்ளிட்ட பள்ளிக்கு தேவையானவைகளை மனுதார்கள் மூலம் பள்ளிக்கு வழங்கப்படும் நேர்வில், அவைகளை உரிய பதிவேட்டில் பதிவு செய்து மனுதாரர்களுக்கு பொருட்கள் பெறப்படும் அன்றே ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பள்ளி உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பொருட்டு தொகையாக வழங்கப்படும் நேர்வுகளில், இதற்கென முதன்மைக் கல்வி அலுவலரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் பெறப்படும் தொகையினை வரவு வைப்பதுடன், உடனடியாக தேவைப்படும் பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அப்பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பள்ளிகளுக்கு தேவையான கழிவறை கட்டுதல் மற்றும் பராமரிப்பு. குடிநீர் குழாய் சீர் செய்தல், வகுப்பறை மராமத்து பணிகள் உள்ளிட்ட பணிகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவு செய்திடும் வகையில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருள் சார்ந்து பெறப்படும் நிதியினைக் கொண்டு பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கை மற்றும் உரிய புகைப்படத்துடன் EMIS-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும். இதனை தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தி மாண்பமை நீதிமன்றத்தின் தீர்ப்பாணையின்படி உரிய காலக்கெடுவிற்குள் குறிப்பிட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் அறிக்கையாக சட்ட அலுவலருக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இப்பொருள் சார்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி. உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள மீளவும் அறிவுறுத்தப்படுவதுடன், அனுமதி அளிப்பதில் எவ்வித காலதாமதமும் இன்றி, கோரிக்கை பெறப்படும் நாளன்றே அனுமதி வழங்கி பணிகள் நன்முறையில் நிறைவுசெய்யப்படுவதை உறுதிபடுத்திட வேண்டும். தவறின் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு உரிய ஒப்புதல் அளித்திடவும். சார்நிலை அலுவலர்கள் அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் இத்தகவலை தெரிவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் மனுதாரர்கள் பள்ளியினை அல்லது அலுவலர்களை அணுகும்போது, அன்றே உரிய அனுமதி ஆணை வழங்கி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.