தேனி மாவட்ட பகுதியில் உள்ள சின்னமனூரில் யாஸ்மீன் வசித்து வருகிறார். இவருடைய தங்கை பர்வீன் பானு சில மாதங்களுக்கு முன்பு இறந்ததால், அவரின் 8 வயது மகள் நபியா சுல்தானாவை எடுத்து வந்து தானே வைத்து வளர்த்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கருங்கட்டான் குளத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார்.
தினமும் பள்ளிக்கு சென்று வந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமியை பள்ளியினுள் வகுப்பறையில் உட்புகுந்து அதே பகுதியை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் அவரது நண்பர் பார்த்திபன் ஆகியோர் பட்டபகலில் ஆசிரியரை பலமாக தாக்கி விட்டு வலுக்கட்டாயமாக சிறுமியை தூக்கிச் சென்றிருக்கின்றனர்.
இதனையடுத்து ஆசிரியர்கள் தடுத்தும் குழந்தையை கடத்திச் சென்ற அந்த இருவர் மீதும் காவல் துறையில் பள்ளி நிர்வாகம் மற்றும் உறவினர்களும் புகார் அளித்தனர். இருப்பினும் அந்த புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் கடத்திச் சென்றவரின் மீது எந்த வித நடவடிக்கையும் மூன்று நாட்களாக எடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் குழந்தையையும் கண்ணில் காட்டாமல் உள்ளதோடு மிகவும் அலட்சியப் போக்கில் நடந்து கொள்வதால் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாருடன் பெரும் வாக்குவாதத்தில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுமியை கடத்திய சிசிடிவி பதிவுகள் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.