அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணத் தடை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக 1800க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆண்கள், போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள். அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் அதிகரித்தும் வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும் அமைச்சரவை கூட்டத்திற்கு பேசிய அம்மாநில முதலமைச்சர் அசாமில் சராசரியாக 31% குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அசாமில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறியதற்காக 1800க்கும் மேற்பட்டோரை போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக தற்போது மாநிலம் தழுவிய அளவில் கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு எதிராக செயல்பட காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
முன்னதாக அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உட்பட காவல் துறையின் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார்.. அப்போது குழந்தைத் திருமணம் என்ற தீய பழக்கத்திலிருந்து விடுபட அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் வழிகாட்டுதலின்படி, குழந்தை திருமணத்திற்கு எதிரான மாநிலம் தழுவிய அடக்குமுறை நேற்றிரவு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.