ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திது. இதுதொடர்பாக ஏற்கனவே சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர்.
ஈரோட்டில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகள், சேலம், ஓசூரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். மேலும், இதுதவிர திருவனந்தபுரம், திருப்பதியிலும் 2 தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஈரோட்டு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.. அப்போது “ சிறுமியின் உண்மையான வயது 16.. ஆனால் பெயர் மற்றும் வயதை மறைத்து கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.. நிர்பந்தம் செய்து 16 வயதான சிறுமியிடமிருந்து பலமுறை கருமுட்டையை எடுத்து, அவரது குடும்பத்தினரே விற்றனர்.. ஆனால் தானம் தர விரும்பினாலும் 21 வயதான ஒருவரிடம் ஒருமுறை மட்டுமே கருமுட்டையை எடுக்க முடியும்.. சம்மந்தப்பட்ட சிறுமியிடம் கருமுட்டை எடுப்பது தொடர்பாக சாதக பாதகங்கள் எடுக்கப்படவில்லை.. ஒரே மாதத்தில் பலமுறை சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.. ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு தொடர்பு உள்ளது..
சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. விற்பனையில் ஈடுபட்ட 4 தமிழக தனியார் மருத்துவமனைகள் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. நீதிமன்ற ஆணையின் படி, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.. மேலும் முறைகேடாக விற்பனையில் ஈடுபட்ட 4 மருத்துவமனைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்..
2 தனியார் மருத்துவமனைகளும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து நீக்கப்படும்.. ஸ்கேன் மையங்கள் விதியை மீறி செயல்பட்டதால் உடனடியாக மூடப்படும்.. உரிய விதிமுறைகளின் படி, சட்ட விதிகளின் படி இதில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள இரு தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது..