மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் CBI குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர்.
பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மனசாட்சியற்ற கொடூர சம்பவத்திற்கு உலக நாடுகளே கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் CBI தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப்பத்திரிகையின் படி, மெய்தெய் பிரிவினர் குகி சமூகத்தினரின் சில வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். அதன்பிறகு கிராமத் தலைவர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்ட போது, ஒரு பிரிவினர் தேவாலயம் ஒன்றிற்கு திடீரென தீ வைத்துள்ளனர். இதனால் பதட்டம் அதிகமாகி மேலும் வன்முறை வெடித்தது. அப்போது காட்டுக்குள் தப்பிச்சென்ற ஒரு குடும்பத்தைக் கும்பல் துரத்திச் சென்றது. அந்த குடும்பத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதில் இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் சாலையில் நின்றிருந்த போலீஸ் வாகனத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த போலிஸாரிடம் தங்களைக் காப்பாற்றும்படி கூறியுள்ளனர். மேலும் தங்களை வன்முறை கும்பல் துரத்தி வருவதாகவும், போலிஸார் வாகனத்தில் தங்களை ஏற்றிச் செல்லும்படியும் மன்றாடியுள்ளனர். இருந்தும் போலிஸார் தங்களிடம் வாகனத்திற்கான சாவி இல்லை என அலட்சியமாகக் கூறியுள்ளனர். பிறகு அந்த வன்முறை கும்பல் 4 பேரையும் பிடித்துள்ளது. அப்போது அங்கு 5 காவலர்கள் இருந்துள்ளனர். பின்னர் தான் அந்த கும்பல் பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது என குற்ற பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.