பவானியில் தாலி கட்டிய காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இன்ஜினியரிங் படித்த பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி செங்காடு பகுதியில் வசிக்கும் சின்னப்பன் என்பவரின் மகள் ரஞ்சனி (வயது 27). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அந்த நிறுவனத்தை பவானி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கிடு மகன் மோகன்ராஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மோகன்ராஜ் கடந்த வாரம் பெங்களூருவில் இருந்து, சொந்த ஊரான பவானிக்கு வந்துள்ளார். அதன்பிறகு பெங்களூரு செல்லவில்லை என தெரிகிறது. செல்போனில் தொடர்பு கொண்டபோதும் சரியான பதில் இல்லாததால், அதிர்ச்சியடைந்த ரஞ்சனி, பெங்களூருவில் இருந்து கிளம்பி பவானியில் உள்ள மோகன்ராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து கண்ணீர் விட்டு அழுதார் ரஞ்சனி. பிறகு, மோகன்ராஜின் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து காதல் கணவரை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளம்பெண் ஒருவர், திடீர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில், உடனடியாக போலீசாருக்கும் தகவல் பறந்தது. இதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சனியிடம் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதன் பிறகே அந்த இளம்பெண் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.