ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் சாய் சுப்ரியா. இவருக்கு விஜயநகரைச் சேர்ந்த மதுசூதனன் என்ற நபருடன் கடந்த 2008இல் திருமணம் நடைபெற்றது. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மதுசூதனன் தனது மனைவியை வீட்டின் ஒரு அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசக் கூடாது என்ற பல நிபந்தனைகள் விதித்திருந்தார். மேலும், சாய் சுப்ரியாவை பெற்றோர் மற்றும் அவரது குழந்தைகளையும் பார்க்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். பலமுறை அவரது பெற்றோர் சாய் சுப்ரியாவிடம் பேச முயன்றபோதும், மதுசூதனன் பேச அனுமதிக்கவில்லை. இதனால் 14 ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்த சாய் சுப்ரியாவின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
கடந்த 28ஆம் தேதி தங்கள் மகளை, மருமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், தனது மகளான சாய் சுப்ரியாவை கடந்த 14 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், சாய் சுப்ரியாவின் குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த மதுசூதனன் நீங்கள் எப்படி வரலாம் என் வீட்டிற்கு? என்று கூறி போலீசாரை வீட்டிற்குள் வர மதுசூதனன் அனுமதிக்கவில்லை. பின்னர், சுப்ரியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். போலீசார் வீட்டில் சோதனை நடத்தி சாய் சுப்ரியாவை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போலீசார் நீதிமன்றம் வழங்கிய அனுமதியை காட்டி வீட்டிற்குள் நுழைந்தனர். தனி அறையில் அடைக்கப்பட்டு கிடந்த சாய் சுப்ரியாவை போலீசார் மீட்டனர். மிகவும் மெலிந் தோற்றத்துடன் காணப்பட்ட சாய் சுப்ரியாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். இவரை பார்த்த நீதிபதி உடல் நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க உத்தவிட்டார். இதனை அடுத்து, வழக்கறிஞர் மதுசூதனை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.