இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர் வர்க்கத்தை கொள்ளையடிக்கவே உதவுகிறது என்ற கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சாஜி செரியன் பேசுகையில், ”அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம் ஆனால், பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுத்து உருவாக்கப்பட்டதுதான் நமது அரசியல் சாசனம் என விமர்சித்தார். இந்த அரசியல் சாசனம் சுரண்டலுக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் வழங்காது என்றும், சாமானிய மக்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் கொள்ளையடிக்கவே உதவக்கூடியது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றைச் சேர்த்து அரசியல் சாசனம் அழகாக மாற்றியமைக்கப்பட்ட போதிலும், சுரண்டலுக்கான இடம் அப்படியே உள்ளது என்றும் இந்த முறையைத்தான் நாம் கடந்த 75 ஆண்டுகளாக பெருமையுடன் பின்பற்றி வருகிறோம் என அவர் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை சாஜி செரியன் அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், அவர் அமைச்சராக நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அமைச்சரின் பேச்சு குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கோரியுள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் சாஜி செரியனுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.