சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் கொரோனாவின் அடுத்த அலையா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது. இதனால் பல நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில், சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு 2000 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, தினசரி வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது மற்றும் மூன்று வாரங்களுக்கு முன்பு இது சுமார் 1,000 ஆக இருந்ததை விட தற்போது இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் கூறுகையில், ‘கடந்த ஆண்டை போல இன்னொரு கொரோனா அலை இங்கு வரலாம். எனவே முக கவசம், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், கொரோனா அலை தொடங்கியிருந்தாலும், இங்கு பொதுமுடக்கத்திற்கான வாய்ப்பில்லை என்றும் இதனை உள்ளூர் நோயாக கருதி அதனுடன் வாழப் பழகுவோம் என்றும் ஓங் யே குங் கூறியுள்ளார். குறிப்பாக முந்தைய வைரஸ்களை காட்டிலும், தற்போது உள்ள வைரஸ் வகை உயிருக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.