புதிய தலைமை செயலாளர் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலராக முதல்வரின் செயலர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?
- தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியான முருகானந்தம் சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான இவர் 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.
- கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
- மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
- முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக இவர் பொறுப்பு வகித்தார்.
- தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தவுன் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- தற்போது கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் முதல்வரின் தனி பிரிவுச் செயலர் 1 ஆக பணியில் இருந்த நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரங்கள் என்னென்ன தெரியுமா?
மாநிலத்தின் நிர்வாகம், தங்குதடையின்றி இயங்குவது, தலைமைச் செயலாளரின் முழுமுதற் பொறுப்பாகும்.. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் தலைமைச் செயலாளருக்கு உண்டு.
அவசரநிலைகள் அல்லது நெருக்கடிகளின் போது, நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைப்பதிலும், பொது பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தலைமை செயலாளரே முதன்மையாக நிற்பார். அரசு டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும்..
அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் தலைமைச் செயலாளரும்.. அமைச்சரவைக் குழு கூட்டங்களைத் திட்டமிடுவது, அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிடுவதுகூட தலைமைச் செயலாளரின் முக்கியப் பொறுப்புதான்.. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.
பலதரப்பட்ட கொள்கை விஷயங்களில் முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளரே ஆலோசனைகளை வழங்குவார்.. பொருளாதார மேம்பாடு, சமூக நலன், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பிற முக்கியமான பிரச்சினைகள் அடங்கும்.
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே, ஒரு இணைப்பு பாலமாக செயல்படுபவர் தலைமைச் செயலாளர்தான்.. வள ஒதுக்கீடு, கொள்கை சீரமைப்பு, மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகள் போன்ற விஷயங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவார்..
முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்களையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். குறிப்பாக, ஆட்சேர்ப்பு, பயிற்சி, டிரான்ஸ்பர், புரமோஷன் முதல் சம்பந்தப்பட்டவர்களின் வேலையை மதிப்பிட்டு, பொறுப்புகளை வலியுறுத்தும்வரை அடங்கும்.
மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமை செயலாளரின் தலையாய பணியாகும். அதேபோல, அரசு திட்டங்களை அந்தந்த துறைகளின் செயலாளர்கள் உரிய முறையில் நிறைவேற்றுகிறார்களா? திட்டப்பலன்கள் மக்களை சென்றடைகின்றனவா என்றும் துறை செயலாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தி, தலைமை செயலாளர் உறுதி செய்வார்.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர்களால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வது தலைமைச் செயலாளர்தான்.. ஐஏஎஸ் அதிகாரி தவறு செய்யும்போது, விசாரணை நடத்தப்பட்டு, அதில் தவறு செய்ததாக முகாந்திரம் இருப்பது உறுதியானது, ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்கும் தலைமைச் செயலாளர்தான், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்.
அரசாங்க செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு, ஒரு மாநிலத்தின் பட்ஜெட் திட்டத்தை தயாரிப்பதில் தலைமை செயலாளரின் பங்கு தவிர்க்க முடியாதது… சட்ட பேரவையில் புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார்… அந்தவகையில், அரசு திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய பொறுப்பு தலைமை செயலாளருக்கு மட்டுமே உண்டு.
நாட்டில் நிலவும் நெருக்கடிகள், அல்லது அசாதாரண சூழ்நிலைகளின்போது, அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு. இப்படி தமிழக அரசின், ஒட்டுமொத்த பணிகளுக்கும், முழுப்பொறுப்பு தலைமைச் செயலாளரே என்பதால், மிக உயரிய பதவியாகப் போற்றப்பட்டு வருகிறது.
Read more ; தப்பிச் சென்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்..!! கன்னியாகுமரியில் பரபரப்பு