காகித கலை பயிற்சியை கற்பிக்க வட இந்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி அளிக்க டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு தமிழில் பேசவோ, எழுதவோ வராது. பயிற்சியாளர்களால் வழங்கப்படும் நூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எந்திர மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த நூலில் இருப்பதை தமிழ் மொழியாக்கம் என்று கூறுவதை விட, தமிழ் படுகொலை என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
அந்த அளவுக்கு தமிழ் சிதைக்கப்பட்டிருக்கிறது. இத்தகையைக் கலையை கற்பிக்க தமிழகத்தில் ஆட்களே இல்லாததைப் போன்று வட இந்தியர்களை வகுப்பெடுக்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன…? என்பது தான் பள்ளிக்கல்வித் துறை விடையளிக்க வேண்டிய வினாவாகும். எனவே, வட இந்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு கலை ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.